சபரிமலை விவகாரம்: காங்கிரஸ் கடும் கண்டனம்

 

சபரிமலை விவகாரம்: காங்கிரஸ் கடும் கண்டனம்

சபரிமலையில் அரங்கேறி வரும் நிகழ்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

திருவனந்தபுரம்: சபரிமலையில் அரங்கேறி வரும் நிகழ்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பிற்குப் பின் முதன்முறையாக கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இம்முறை பெண்களும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இருப்பினும் நேற்று முன்தினம் பெண் ஒருவர் சன்னிதானம் வரை சென்றார். இதனையடுத்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெண் பத்திரிகையாளர் ஒருவரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பினார். தான் வழிபட போகவில்லை செய்தி சேகரிக்கவே செல்கிறேன் என அவர் கூறியும் அவரை அனுமதிக்க போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து, கவிதா என்ற பத்திரிகையாளரும், ரெஹனா பாத்திமா என்ற சமூக செயற்பாட்டாளரும் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். சர்ச்சைக்குரிய சமூக செயற்பாட்டாளர் ரெஹனா பாத்திமா அங்கு சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவர் உண்மையான வழிபாடு நோக்கம் கொண்டவர் அல்ல. விளம்பரத்துக்காகவே அவர் அங்கு செல்கிறார் எனவும், கோயிலின் புனித தன்மையை அவர் கெடுக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சபரிமலை கோயிலுக்கு சென்ற அந்த இரு பெண்களும் கமாண்டோ உடையணிந்து ஹெல்மெட் அணிந்தபடி சென்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலை ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. பக்தர்கள் மட்டுமே அங்கு செல்ல வேண்டும். கேரள போலீஸ் செய்தது தவறு. ரெஹனா பாத்திமா என்ற சமூக ஆர்வலருக்கு போலீஸ் உடையை அளித்தது தவறு என்றார். மேலும், தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த சூழ்நிலையை இன்னும் நன்றாக கையாண்டிருப்போம் என்று கூறிய சென்னிதலா, பக்தர்களிடம் பேசி இருப்போம். வன்முறை ஏதும் நடக்காமல் செய்திருப்போம் என்றும் தெரிவித்தார்.