சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க! உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

 

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க! உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சபரிமலைக்கு வருகை தரும் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி மிளகாய் பொடி மற்றும் மிளகு ஸ்பிரே தாக்குதலுக்கு ஆளான பிந்து அம்மிணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பல பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் தீவிர எதிர்ப்பு காரணமாக பல பெண்கள் பாதி வழியில் திரும்பினர். இருப்பினும் கடந்த ஜனவரியில் பிந்து அம்மிணி மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோயில்

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதியன்று திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் குழு சபரிமலை செல்வதற்காக எர்ணாகுளம் வந்தனர். அந்த குழுவில் பிந்து அம்மிணியும் ஒருவர். அன்று பிந்து அம்மிணியை மிளகாய் பொடி மற்றும் மிளகு ஸ்பிரே மூலம் ஒருவர் தாக்கினார். மேலும், காவல்துறை அதிகாரிகள் தற்போது சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என உறுதியாக அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலை செல்லும் திட்டத்தை கைவிட்டனர்.

திருப்தி தேசாய்

இந்நிலையில், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிந்து அம்மிணி மனு தாக்கல் செய்துள்ளார். கேரள தேவஸ்தான் அமைச்சர் கடகம்பல்லி சுரேந்தரன் அண்மையில், சபரிமலைக்கு வரும் எந்தவொரு பெண்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு அளிக்காது. திருப்தி தேசாய் போன்ற ஆர்வலர்கள் சபரிமலையை தங்களது பலத்தை நிருபிக்கும் இடமாக பார்க்க கூடாது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்றால், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கி வர வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.