சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்றிரவு சாத்தப்பட்டது

பத்தனம்திட்டா: ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்றிரவு சாத்தப்பட்டது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கேரளா மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை சன்னிதானம் நடை கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது முதலே கோயிலுக்கு செல்ல சில பெண்கள் முற்பட்டனர். ஆனால், அவர்களை கோயிலுக்குள் செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதுவரை கோயிலுக்கு சென்ற 9 பெண்களும் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தவிர மற்றவர்களுக்கு நிலக்கல், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 6 நாட்கள் பூஜைக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்றிரவு சாத்தப்பட்டது. வருகிற நவம்பர் 5-ம் தேதி திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சித்ரதிருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளையொட்டி அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு மறுநாள் நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி மண்டல மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் கோயில் நடை திறக்கப்படடு டிசம்பர் 27-ம் தேதி மீண்டும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.