சந்திராயன் 2 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

 

சந்திராயன் 2 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

அடுத்த ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி தெரிவித்துள்ளார்

ஸ்ரீஹரிகோட்டா: அடுத்த ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி தெரிவித்துள்ளார்.

நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பல்வேறு கோணங்களில் நிலவை முப்பரிமாண படங்களாக எடுத்து அனுப்பியது. நிலவில் தண்ணீர் திவலைகள் தோன்றி மறைகின்றன என்பதை கண்டு பிடித்தது. 2 ஆண்டுகள் வரை சந்திராயன்-1 செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அதன் தொடர்பு அறுந்து போனது.

இதைத்தொடர்ந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்து வருகிறது. இந்த விண்கலம் கடந்த ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த திட்டம் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, ஜிசாட்6ஏ மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைகோள்கள் தோல்வியில் முடிந்தன. எனவே சந்திராயன்-2 விண் கலத்தை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். எனவே இந்த விண்கலத்தை ஏவும் திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

sivan

இந்நிலையில், பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் உதவியுடன் விண்ணில் இன்று சீறிப்பாய்ந்த இந்தியாவின் அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக அதனுடைய சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டன. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், புவி கண்காணிப்புக்காகவே தற்போது செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஹைசிஸ் செயற்கைக்கோள் மூலம், எடுக்கப்படும் புவியின் புகைப்படம் மிகத் தெளிவாக இருக்கும். சாலைகள் மற்றும் அதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்கும் வகையில் இந்த செயற்கோள்கள் படம்பிடித்து அனுப்பும். இந்தியாவின் 47 செயற்கைக்கோள்கள் புவிப்படப் பாதையில் சுற்றி வருகின்றன.

இந்தியாவின் அதிக எடை கொண்ட மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த ஜிசாட் 11 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு ஏவப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திலேயே ஜிஎஸ்எல்வி.,யின் ஜிசாட் 7 ஏ செயற்கைகோளையும் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய திட்டமான சந்திராயன் 2 அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது என்றார்.