சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையமாக மாறும் அவுரங்கபாத் விமான நிலையம்… பெயர் மாற்றத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்…

 

சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையமாக மாறும் அவுரங்கபாத் விமான நிலையம்… பெயர் மாற்றத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்…

மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையமாக மாற்ற அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவுரங்கபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி  மகாராஜ் விமான நிலையம் என மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாரிசுதான் சத்ரபதி சம்பாஜி மகாராஜ். அவுரங்கபாத்தின் சிகல்தானா பகுதியில் அவுரங்கபாத் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை  சத்ரபதி சம்பாஜி  மகாராஜ் விமான நிலையம் என மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அவுரங்கபாத் விமான நிலையத்தின் பெயரை  சத்ரபதி சம்பாஜி  மகாராஜ் விமான நிலையம் என மாற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சத்ரபதி சம்பாஜி  மகாராஜ்

விமான நிலையம் பெயர் மாற்றம் தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், சத்ரபதி சம்பாஜி விமான நிலையம் என பெயர்மாற்றம் செய்யக்கோரி அவுரங்கபாத் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையிலும் எழுப்பட்டது. பெயர் மாற்ற தொடர்பான மாநில அமைச்சரவையின் முடிவு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார். ஏற்கனவே மும்பை விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  விமான நிலையமாகவும்,  கோலாப்பூர் விமான நிலையம் சத்ரபதி ராஜாராம் மகாராஜ் எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.