சத்தீஸ்கரில் தடை உத்தரவுகளை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மீது எப்.ஐ.ஆர்….. பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக குற்றச்சாட்டு…

 

சத்தீஸ்கரில் தடை உத்தரவுகளை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மீது எப்.ஐ.ஆர்….. பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக குற்றச்சாட்டு…

சத்தீஸ்கரில் தடை உத்தரவுகளை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஷைலேஷ் பான்டே மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை உத்தரவை மீறியதாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஷைலேஷ் பான்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கூடுதல் எஸ்.பி. ஓ.பி. சர்மா

இது குறித்து காவல்துறையின் கூடுதல் எஸ்.பி. ஓ.பி. சர்மா கூறுகையில், பிலாஸ்புரில் உள்ள எம்.எல்.ஏ. சைலேஷ் பான்டே வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பெரிய அளவில் மக்கள் கூடியிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. சுமார் ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூடியிருந்தனர். இது மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை மீறியதாகவும் எனவே இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 மற்றும் 279ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

பா.ஜ.க.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. ஷைலேஷ் பான்டே கூறுகையில், நான் என் வீட்டுக்கு சென்ற போது, அங்கு பெரிய கூட்டம் இருப்பதை பார்த்தேன். இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி. ஓ.பி. சர்மாவுக்கு தகவல் கொடுத்தேன். சிறிது நேரத்துக்கு பிறகு மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நாம் மக்களுக்கு  உதவி செய்தாலும் அது எப்படி குற்றமாகும்?  நான் மக்களை வரும்படி அழைக்கவில்லை. தடை தளர்வு இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கலாம். போலீசார் ஏன் இந்த நடவடிக்கை எடுத்தார்கள் என எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.