சட்டவிரோதமாக வைத்திருக்கும் பேனர்களை அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

சட்டவிரோதமாக வைத்திருக்கும் பேனர்களை அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிபதிகள், மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

முன்னதாக பேனர் வைக்க வேண்டுமென்றால் முறையான அனுமதி பெற வேண்டும், பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பேனர்களை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால் தமிழக அரசே அந்த விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்திருந்தது பல்வேறு தரப்பினருக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளது.