சட்டப்பூர்வமாக ஒரு கொலை வேண்டாம்: ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

 

சட்டப்பூர்வமாக ஒரு கொலை வேண்டாம்: ஆளுநருக்கு  உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி  உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பியது. அதன் மீது ஆளுனர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், அவர்களின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, கொடைக்கானல் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 மாணவிகளை உயிருடன் எரித்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரையும் முன் விடுதலை செய்வதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதேசமயம், 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். 

அந்த வகையில், 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், #28YearsEnoughGovernor (28 ஆண்டுகள் போதும் ஆளுநர்) என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்திருந்தார்.

அதே ஹேஸ்டேக்கில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப்பூர்வமாக ஒரு கொலை வேண்டாம்! பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க #28YearsEnoughGovernor ” என பதிவிட்டுள்ளார்.