சட்டசபையா கிரிக்கெட் கிரவுண்டா? பேரவையில் கலகலப்பு!!

 

சட்டசபையா கிரிக்கெட் கிரவுண்டா? பேரவையில் கலகலப்பு!!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசிய பேச்சு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசிய பேச்சு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். இதையடுத்து, மீதான பொது விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றைய விவாதத்தின் போது, சட்டமன்றத்தில் முதல்வர் ‘சிக்ஸர் மேல் சிக்ஸராக’ அடித்து வருகிறார் என அதிமுக உறுப்பினர் செம்மலை பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் போடும் ‘பால்’ ஆளுங்கட்சியை அவுட்டாகும் என்றார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அது நிச்சயம் ‘நோ பால்’ தான் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கமணி, எதிர்க்கட்சி தலைவர் இன்னும் மைதானத்துக்குள் வராமலேயே பந்து வீசிக் கொண்டிருக்கிறார் என்றார். இந்த கலகலப்பான உரையாடல் சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

முன்னதாக, ஏழை, எளிய மக்களுக்கான ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம் தேர்தலுக்கானது என திமுக-வினர் குற்றம் சாட்டினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, இந்த அறிவிப்பு தேர்தலுக்கு அல்ல, ஏழைகளுக்கு உதவத்தான். ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை இம்மாத இறுதிக்குள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.