சசிகலா விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் கமல்ஹாசனுக்கு நன்றி

 

சசிகலா விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் கமல்ஹாசனுக்கு நன்றி

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையை  சேர்ந்த சுதா என்பவர், பெண்கள் பாதுகாப்பிற்காக ‘ரௌத்திரம்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளார். பெண்களுக்கு பாலியல் பிரச்னைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்த செயலி மூலம் காவல் துறை மற்றும் பெற்றோர்களின் உதவியை பெற முடியும். இந்த செயலி தொடக்க விழா தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் ‘ரௌத்திரம்’ செயலியை வெளியிட்டார்.

கமல் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், ரூபா மிக துணிச்சலான பெண்மணி. அவருக்கு ஏற்கனவே ரௌத்திரம் இருக்கு. சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்றதை சுட்டிக் காட்டியவர். தன் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் தைரியமாக அந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என புகழாரம் சூடினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ரூபா ஐபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னைப் பற்றி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நேர்மையான பணிக்கான உங்களது பாராட்டுகள், உயர்ந்த கருத்துக்கள் மற்றும் மதிப்புகளுடன் கூடிய உங்களது நிலைப்பாடுகளுக்கு மதிப்பளிக்கின்றன. உங்களது அரசியல் வரவு, புதிய நம்பிக்கைக்கு வழிவகுக்கும்” என பதிவிட்டுள்ளார்.