சகுனியின் சூழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் நியாயம்? | மகாபாரத கதைகள்

 

சகுனியின் சூழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் நியாயம்? | மகாபாரத கதைகள்

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,
இந்த கைகள்தானே என்னை வாரி அணைத்தவை. இந்த விரல்கள் தானே என் கண்ணீரைத் துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள் வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

சகுனியின் சூழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் நியாயம்? | மகாபாரத கதைகள்

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,
இந்த கைகள்தானே என்னை வாரி அணைத்தவை. இந்த விரல்கள் தானே என் கண்ணீரைத் துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள் வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.
இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி. அவன் தந்தையோ வலி தாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி அமர்ந்து இருந்தார். கண் திறந்தான் சுபலன், எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

saguni

‘மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்து விடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்க வேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்க வேண்டும்’ என்றான். 
அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே?கேட்டான்  சகுனி.

saguni

மகனே, உன் பலம் உடல் வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்க முயற்சி செய். எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டி விட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை. இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இது தான் பொருளாக இருக்க வேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும், அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவது தான் உன் திறமை. எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டு விடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வது தான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.
தந்தையே, நாம் என்ன தான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால் தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு? 
மகனே! காந்தாரியின் ஜாதக பலன் படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார். நமது விளக்கத்தையும் கேட்கவில்லை. ஆடாகவே இருந்தாலும், அது பலியானதால் காந்தாரி ஓர் விதவை தானே? ஓர் விதவையை என் குலத்தில் கட்டி வைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம். உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல், வெறுப்பு, பழி, வெஞ்சினம், இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில் கொள் என்றான் சுபலன். 

saguni

இதைக் கூறும் போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டு மொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி. 
தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து என்னை அனைவரும் ஏளனம் செய்வார்களே? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

மகனே! என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம் தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே! அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது. தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.
காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.