கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்

 

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதேபோன்று மற்றொரு அதிர்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக அக்குழந்தையின் தந்தை புகார் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது இரட்டைக் குழந்தைகள் பிறப்பின் போது ஆரோக்கியமாக பிறந்ததற்கான சான்றை முன் வைத்தார். மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றை எடுத்துச் சென்ற போது, அதற்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட போது, பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள், காரணம் கேட்ட போது, அது வயதானவரின் ரத்தம் என கூறினர். இதையடுத்து, குழந்தையின் உடல் மெலிந்து கொண்டே போனதுடன், அடிக்கடி உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. இதனால், கடந்த 8-ம் தேதி மீண்டும் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த போது, குழந்தைக்கு எச்.ஐ.வி தோற்று இருப்பதாக தெரியவந்தது என்றார்.

தமக்கும், தனது மனைவிக்கும் எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தையும் முன்வைத்த அவர், இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை, சுகாதாரத்துறை, தேசிய மனித உரிமை ஆணையம் உள்பட அனைத்து துறைக்கும் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.

திருச்சி, திருப்பூர், கோவை அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் இதுவரை குழந்தைக்கு சிகிச்சை அளித்ததில்லை எனவும், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போடப்பட்ட தடுப்பூசி மட்டுமே போட்டிருப்பதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன், அரசு மருத்துவமனையில் எந்த விதமான தவறுகளும் நிகழவில்லை எனவும், ரத்த சிவப்பணுக்கள் மட்டுமே ஏற்றப்பட்டதால் அதிலிருந்து எச்ஐவி பரவ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.