‘கோவையில் சாதி உணர்வால் கட்டபட்ட 20 அடி சுவர் விழுந்து 17 பேர் பலி’: இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச பதிவு!

 

‘கோவையில் சாதி உணர்வால் கட்டபட்ட 20 அடி சுவர் விழுந்து 17 பேர் பலி’: இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச பதிவு!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆதி திராவிடர் காலனியில்  சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தது.  இதில் 17 பேர் பலியாகினர்.  இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.  

ttn

மேலும் காலனியை பிரிக்க சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பலரும் இரங்கலையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனிடையே 17 பேரின் மரணத்திற்கு நீதி கேட்க சென்ற தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், திராவிடர்-தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 பேர் கைதாகியுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித், ‘கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி  சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்.#மனிதமற்ற_மனிதர்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில், ‘நீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது’ என்றும் ‘தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதமற்ற_மனிதர்கள்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.