கோவா திரைப்பட விழாவில் பராசக்திக்கு தடை… இறந்தும் அலறவிடும் பராசக்தி ஹீரோ கலைஞர்

 

கோவா திரைப்பட விழாவில் பராசக்திக்கு தடை… இறந்தும் அலறவிடும் பராசக்தி ஹீரோ கலைஞர்

சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தை திரையிட பாஜக தடை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவா: சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தை திரையிட பாஜக தடை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் கடந்த 1952-ம் ஆண்டு வெளியான படம் ”பராசக்தி”. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான அந்த திரைப்படத்தில் கருணாநிதியின் வசனங்கள் பகுத்தறிவு, சுயமரியாதை என்ற நெருப்பை கக்கின. அவரது ஒவ்வொரு வசனமும் மூட நம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்தன. 

parasakthi

மூட நம்பிக்கைகள் தலை தூக்கி இருந்த காலக்கட்டத்தில் இப்படியும் ஒருவரால் வசனம் எப்படி எழுத முடிந்தது என இன்று வரை தமிழ் திரையுலகம் ஆச்சரியப்பட்டு கொண்டே இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவின் வசனங்களை பராசக்திக்கு முன், பராசக்திக்கு பின் என பிரித்து கொள்ளலாம் என்ற அளவிற்கு கலைஞர் கருணாநிதியின் வசனம் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய இளைஞர்களும் யூ டியூப்பில் பராசக்தி படத்தை சிலாகித்து கொண்டிருக்கின்றனர்.

thalaivar

இந்நிலையில், கோவாவின் பனாஜி நகரில் 49-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த நவ.20ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் நவ.28ம் தேதி நிறைவடையவுள்ளது. சுமார் 68 நாடுகளைச் சேர்ந்த 212 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவில் தமிழ் திரையுலகின் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’, ‘பேரன்பு’, ‘டூலெட்’, ‘பாரம்’ ஆகிய 4 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
 
இது தவிர மறைந்த திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படமும், நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ ஆகிய படங்கள் திரையிடப்பட இருந்தது.

sivaji

ஆனால், திடீரென கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய  “பராசக்தி” திரைப்படத்திற்கு பதில் அவர் கதை வசனம் எழுதிய ”மலைக்கள்ளன்” திரைப்படம் திரையிடப்பட்டது. பராசக்தி பகுத்தறிவு பிரசாரம் செய்யும் படம் என்பதால் இதை திரையிட்டால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவிடும் என அஞ்சி பராசக்தியை திரையிட பாஜக தரப்பு முட்டுக்கட்டை போட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவர் இறந்த பிறகும் தனது கொள்கைகளால், எழுத்துக்களால் ஒரு தரப்பை அலற விட்டுக்கொண்டிருக்கிறார் என சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.