கோர தாண்டவம் ஆடிய கஜா: தப்பியது சென்னை; அடுத்தது என்ன?

 

கோர தாண்டவம் ஆடிய கஜா: தப்பியது சென்னை; அடுத்தது என்ன?

கஜா புயல் காரணமாக சென்னைக்கு  பாதிப்பில்லை என்ற போதும் சில இடங்களில் லேசான மழை பெய்ததுடன் பலமான காற்று வீசியது.

சென்னை: கஜா புயல் காரணமாக சென்னைக்கு  பாதிப்பில்லை என்ற போதும் சில இடங்களில் லேசான மழை பெய்ததுடன் பலமான காற்று வீசியது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. கஜா புயல் காரணமாக நேற்று பிற்பகல் முதலே சென்னையில் வானம் இருண்டு காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை இருந்ததால்  சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

சாலையோரக் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் எதிர்பார்த்ததை விடவும் குறைந்த அளவிலேயே மழை பெய்தது. மாலையிலும் இரவிலும் விட்டு விட்டு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. புயல் தாக்கம் காரணமாக மெரீனா கடற்கரையில் பலத்த காற்று வீசியது. இதனால் கடற்கரை வெறிச்சோடி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.