கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; தனியார் பேருந்துகளில் வழக்கம் போல் கட்டண கொள்ளை

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; தனியார் பேருந்துகளில் வழக்கம் போல் கட்டண கொள்ளை

தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அங்கு பயணிகள் கூட்டம் அலை மோதியது

சென்னை: தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அங்கு பயணிகள் கூட்டம் அலை மோதியது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரக்கடைசி நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் வசிப்போர் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று சென்றனர்.

இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,775 அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 770 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்ட நிலையில், கூடுதலாக இயக்கப்பட்ட பேருந்துகளிலும் பெரும்பாலான இருக்கைகள் ஆன்லைன் மூலம் நிரம்பி விட்டது.

முன்பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும், கடைசி நேரத்தில் விடுமுறை கிடைத்தவர்களும் என ஏராளமானோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு வழக்கம் போல் தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கி விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

வழக்கமாக தனியார் ஏசி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோயம்பத்தூருக்கு ரூ.700 முதல் 900வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நேற்றைய தினம் ரூ.1,500 முதல் ரூ.2,200 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இதுபோன்று தொடர் விடுமுறைகளின் போது தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்பதையும், முறையான அனுமதி பெற்ற பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பர். அதேபோல், இந்த முறையும், விடுமுறை தினங்களில் தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கைப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

எனவே, கட்டண கொள்ளையை தடுக்க முறையான சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு கட்டண கொள்ளையை கண்டும் காணாமல் இருப்பதை அரசு நிறுத்தி விட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.