‘கொரோனா வைரஸ் பீதி’..கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடல் : கேரள அரசின் அதிரடி நடவடிக்கை!

 

‘கொரோனா வைரஸ் பீதி’..கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடல் : கேரள அரசின் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், கேரளாவில் மட்டுமே 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி விட்டது. அதனால் அதிக மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், கேரளாவில் மட்டுமே 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கேரள அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ttn

இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடிகள், மதரஸாக்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் 7 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும்  மற்ற வகுப்புகளுக்கு வழக்கம் போலத் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ttn

மேலும், திருவிழாக்களை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் திருமணங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் 12 ஆக உயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

ttn

இன்று மாலை கொச்சியில் நடைபெற்ற மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க மார்ச் 31 ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட முடிவு எடுக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் வரும் மார்ச் 14ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை சபரிமலைக்குப் பக்தர்கள் மாதபூஜைக்கு யாரும்  வர வேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கக் கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.