கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் ரூ.1,515 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்….

 

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் ரூ.1,515 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்….

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,515 கோடி ஈட்டியுள்ளது.

நுகர்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,515 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 3.56 சதவீதம் குறைவாகும். இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,571 கோடி சம்பாதித்து இருந்தது. 

இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

2019 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருமானம் ரூ.9,055 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் வருவாய் சுமார் 10 சதவீதம் சரிவு கண்டுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.10,018 கோடி ஈட்டியிருந்தது. கொரோனா வைரஸ் லாக்டவுனால் உற்பத்தி மற்றும் சப்ளையில் ஒரளவு பாதிப்பு ஏற்பட்டதால் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர்

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.14 வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்று ரூ.11ஐ இடைக்கால டிவிடெண்டாக வழங்கி இருந்தது. இதனையடுத்து 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த சென்ற நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கான மொத்த டிவிடெண்ட் ரூ.25ஆக உள்ளது.