கொரோனா வைரஸ் இல்லாத 5வது வடகிழக்கு மாநிலம் மிசோரம்….

 

கொரோனா வைரஸ் இல்லாத 5வது வடகிழக்கு மாநிலம் மிசோரம்….

மிசோரம் மாநிலத்தின் ஒரே கொரோனா வைரஸ் நோயாளிக்கும் தொடர்ச்சியான 3 பரிசோதனை முடிவுகளும் நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து மிசோரத்தை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக அறிவிக்கலாம் என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றில் அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொண்ட லாக்டவுன் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அந்த மாநிலங்களில் கொரோனா பெரிய அளவில் பரவது தடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

சிக்கிம் மற்றும் நாகலாந்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. அருணாசல பிரதேசத்தில் ஒருவரும், மணிப்பூரில் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் கடந்த மாதம் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனையடுத்து அந்த மாநிலங்கள் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 2 பேர் மட்டுமே முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் குணமடைந்தையடுத்து கடந்த மாதம் 25ம் தேதியன்று அந்தமாநிலமும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக அறிவித்தது. ஆனால் கடந்த சனிக்கிழமையன்று முதல் அங்கு புதிதாக பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. தற்போது அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

மிசோரம் வரைபடம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் இல்லாத 5வது மாநிலமாக மிசோரம் உருவெடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவரும் குணமடைந்து விட்டார் என தகவல். இது தொடர்பாக மிசோரம் சுகாதார சேவைகள் இயக்குனர் எச். லால்சங்நுங்கா கூறுகையில். மாநிலத்தின் ஒரே நோயாளியான நடுத்தர வயது மனிதருக்கு  தொடர்ச்சியான 3 மருத்துவ பரிசோதனைகளிலும் நெகடிவ் ரிசல்ட் கிடைத்தது. இந்த வார இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தார். மிசோரம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் லால்தாங்லியானா கூறுகையில், மாநிலத்தை கோவிட்-19 இல்லாத மாநிலமாக அறிவிக்க முடியும் என தெரிவித்தார்.