கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக திரிபுரா அறிவிப்பு….. கொரோனா இல்லாத மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது

 

கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக திரிபுரா அறிவிப்பு….. கொரோனா இல்லாத மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது

கோவா, மணிப்பூரை தொடர்ந்து தற்போது திரிபுராவும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அருணாசல பிரதேசம், கோவா, மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி, திரிப்புரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளன.

கொரோனா வைரஸ்

கோவாவில் கொரோனா வைரஸால் மொத்தமே 7 பேர்தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் அங்கு வேறு யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து அண்மையில் அம்மாநிலத்தை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கோவா அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணிப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் கடைசி நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். இதனையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத 2வது மாநிலமாக மணிப்பூர் ஆனது. 

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்

தற்போது கொரோன வைரஸ் இல்லாத மாநிலமாக திரிபுராவை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு கொரோனா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டார். இதனையடுத்து நமது மாநிலம் கொரோனா வைரஸ் இல்லாததாகி விட்டது. சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்கவும், அரசாங்க வழிகாட்டுதல்களை பின்பற்றும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்தார்.