கொரோனா லாக்டவுனால் வேலையை இழந்த 2.7 கோடி இளைஞர்கள்… வேலை இல்லாததால் குடும்பங்களின் சேமிப்பு கரையும் அபாயம்…

 

கொரோனா லாக்டவுனால் வேலையை இழந்த 2.7 கோடி இளைஞர்கள்… வேலை இல்லாததால் குடும்பங்களின் சேமிப்பு கரையும் அபாயம்…

கொரோனாவால் நடைமுறைப்படுத்த லாக்டவுனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் வேலை இல்லாததால் குடும்பங்களின் சேமிப்பு கரையும் என சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் பரவ தொடங்கியது மற்றும் அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட லாக்டவுனால் விமானம், உற்பத்தி, ஹோட்டல், பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பல கோடி பேரின் வேலையையும் பறித்துள்ளது. 

சி.எம்.ஐ.இ.

பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.எம்.ஐ.இ. வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 வயது இளைஞர்கள் 2.70 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். 30 வயது நடுத்தர வயது பிரிவினரில் 3.3 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதில் 86 சதவீதம் பேர் ஆண்கள். வேலை இழப்புகள் இளம் வயதினரிடையே அதிகமாக உள்ளன. இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 24 சதவீதமாக குறைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது இதற்கு முக்கிய காரணம்.

வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

சி.எம்.ஐ.இ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் கூறுகையில், இளம் வயது மக்கள் வேலைகளை இழப்பது குடும்பங்களின் சேமிப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த காலங்களில் குடும்பங்கள் பணத்தை நன்கு பாதுகாக்கக்கூடும் என்றாலும், இளம் வயதினர் வேலை இழப்பதால், வீடு வாங்க  அல்லது பொருட்களை வாங்குவற்காக அல்லது ஓய்வு பெறுவதற்காக பெரும்பாலும் சேமிக்கப்படும் கூடுதல் பணத்தை குடும்பங்கள் இழக்கின்றன. இந்த சேமிப்பு இழப்பு நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.