கொரோனா தடுக்கப்படும் வரை ஊரடங்கு! – பிரதமரிடம் வலியுறுத்திய அன்புமணி

 

கொரோனா தடுக்கப்படும் வரை ஊரடங்கு! – பிரதமரிடம் வலியுறுத்திய அன்புமணி

கொரோனா தொற்று பிரச்னை முடியும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அந்த வகையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸிடமும் மோடி பேசினார். அப்போது அன்புமணி தரப்பில் பிரதமரிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டரில், “மாண்புமிகு பாரதப் பிரதமர் இன்று மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன்.

கொரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி  பிரதமரை கேட்டுக் கொண்டேன்.  இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். அவை விரைவில் வழங்கப்படும். உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்” என்று கூறியுள்ளார்.