கொரோனாவைரஸ் தயவால்…..வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு…

 

கொரோனாவைரஸ் தயவால்…..வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு…

கொரோனாவைரஸ் தாக்கம் மற்றும் சீனா பொருளாதாரத்தின் முடக்கம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருகிறது. இந்தியன் ஆயின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆண்டில் இதுவரை சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

அனைத்திந்திய பெட்ரோலியம் முகவர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்ததற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிபொருள் விலை பாதிக்கும் வகையில் இருக்கும் என முந்தைய ஆண்டுகளின் புள்ளவிவரங்கள் கூறுகின்றன என தெரிவித்தார்.

பெட்ரோல் பங்கு

தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனாவைரஸ் மற்றும் சீனாவின் பொருளாதாரம் முடங்கியது போன்ற காரணங்களால்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதால் அதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் உடனடியாக நம் நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.