கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு “அறிகுறி இல்லை” : ராதாகிருஷ்ணன்

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு “அறிகுறி இல்லை” : ராதாகிருஷ்ணன்

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவியதால் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000 ஐ எட்டியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் சென்னையில் மட்டுமே 206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவியதால் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ttn

அதனால் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்ற  கோயம்பேடு தொழிலாளர்களை கண்டறிந்து தனிமைபடுத்தும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் சென்றவர்கள் 40 பேருக்கும், அரியலூருக்கு சென்ற 20 பேருக்கும் கடலூருக்கு சென்ற 107 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கோயம்பேட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டதில் இருந்து அனைத்து வியாபரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருவதாகவும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் கூறியுள்ளார். மேலும், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறி எதுவுமே இல்லை என்றும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.