கொத்துக்கொத்தாக மடியும் குழந்தைகள்: பீகாரில் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு!

 

கொத்துக்கொத்தாக மடியும் குழந்தைகள்: பீகாரில் பலி  எண்ணிக்கை 108 ஆக உயர்வு!

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. 

முசாபர்பூர்: பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. 

bihar

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் காரணமாகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 66 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.  பலியான குழந்தைகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மூளைக் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகள் மருத்துவர்களின்  தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இந்த காய்ச்சலானது கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.

bihar

இதன்காரணமாக  முசாபர்பூரில்  உள்ள பள்ளிகள் வரும் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளதாகவும்,  மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. 89 குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் 19 குழந்தைகள் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.