கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு பதற்றத்துடன் செயல்படுகிறது: டிடிவி தினகரன்

 

கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு பதற்றத்துடன் செயல்படுகிறது: டிடிவி தினகரன்

கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு பதற்றத்துடனும், அவசரத்துடனும் செயல்படுவதால் சந்தேகம் எழுவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு பதற்றத்துடனும், அவசரத்துடனும் செயல்படுவதால் சந்தேகம் எழுவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக அங்கு பல மர்ம மரணங்கள்  நிகழ்ந்தன. 

இதனையடுத்து கொடநாடு கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயான் என்பவர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸிடம் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முதல்வர் உட்பட அதிமுகவினர் மறுத்து வருகின்றனர். இதற்கிடையே, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை டெல்லி சென்ற தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக நடந்து கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய குற்றவாளிகளை கைது செய்ய டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி உள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை காவலில் எடுக்க ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ பதற்றமும், அவசரத்துடன் தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரிகிறது.

கொடநாடு எஸ்டேட் 5 பேர் கொலையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வழக்கு விசாரணை வரும்போது சந்தித்து இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி செயல்படுகிறார்கள் என்பதால் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்,