கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: ஜன.,25-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

 

கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: ஜன.,25-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது வருகிற 25-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

புதுதில்லி: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது வருகிற 25-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் வாக்குமூலம் அளித்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தமிழக காவல்துறையினர் தில்லியில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வர் பழனிசாமி மீது புகார் இருப்பதால் தமிழக காவல்துறை விசாரிப்பது சரியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், இதன் மீது வருகிற 25-ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.