கையுறை வாங்க பணமில்லை; வெறும் கையில் பயிற்சி எடுத்த அமித் பங்கல்

 

கையுறை வாங்க பணமில்லை; வெறும் கையில் பயிற்சி எடுத்த அமித் பங்கல்

டெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் குத்துச் சண்டை பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்த அமித் பங்கல் ஒருகாலத்தில் பயிற்சி எடுக்க கையுறை வாங்கக் கூட பணமில்லாமல் இருந்துள்ளார்.

 

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ஹரியானா மாநிலத்தின் மைனா கிராமத்தை சேர்ந்த அமித் பங்கல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.

 

அமித் பங்கலின் தந்தை விஜேந்தர் சிங் ஒரு ஏழை விவசாயி. இவருக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கோதுமை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். அமித் பங்கலின் சகோதரர் அஜய் பங்கல். ஐவரும் ஒரு குத்துச்சண்டை வீரர் தான். ஆனால், குடும்ப வறுமை காரணமாக தனது குத்துச்சண்டை கனவை துறந்து இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து ராணுவ்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் அஜய் பங்கல் கூறுகையில், கடந்த காலங்களில் எனது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. வயலில் கிடைக்கும் வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருந்தது. சர்வதேச அளவில் குத்துச்சண்டை வீரர் ஆக வேண்டும் என நானும் பயிற்சி எடுத்து வந்தேன். ஆனால் குடும்பத்தின் வறுமை சூழல் கருதி ராணுவத்தில் 2011-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அதன்பின்னரே எங்களது நிலைமை சற்று மாறியது. ஆனால், அமித் தனது பயிற்சியை விடாமல் மேற்கொண்டு வந்தார். ஒரு காலத்தில் பயிற்சியின் போது கையுறை வாங்கக் கூட பணமில்லை. ரூ.3,000 மதிப்புள்ள கையுறை வாங்கக் கூட பணமில்லாமல் வெறும் கைகளில் பயிற்சி எடுத்துள்ளார். குத்துச்சண்டை வீரருக்கு தேவையான, போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவில்லாமல் வெறும் வயிற்றில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார் என்றார்.

 

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வரும் அமித் பங்கல், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவரது தந்தை விஜேந்தர் சிங்கின் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் ஆசையை அமித் பங்கல் நிறைவேற்றுவதுடன் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்று நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.