கே.பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

 

கே.பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.பாக்யராஜ் அளித்த கடிதத்தை நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.பாக்யராஜ் அளித்த கடிதத்தை நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

‘சர்கார்’ திரைப்பட கதை திருட்டு தொடர்பான சர்ச்சையை அடுத்து, இயக்குநர் கே.பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டால் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் சங்க தலைவர் பதவியை ஏற்பேன் என பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாக்யராஜ் அளித்த ராஜினாமா கடிதத்தை சங்கத்தில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டதாக பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சங்க உறுப்பினர்களும், செயற்குழு நிர்வாகிகளும் தங்களது ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். தாங்களே சங்கத் தலைவராக தொடர வேண்டும் என அனைவரும் தொலைப்பேசி மூலம் கூறியதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, தாங்களே திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக தொடர்கிறீர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்க உறுப்பினர்களின் இந்த முடிவிற்கு பாக்யராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. உறுப்பினர்கள் ராஜினாமாவை ஏற்க மறுத்த நிலையில், எழுத்தாளர்கள் சங்க தேர்தல் நடைபெறுமா அல்லது மீண்டும் ஒருமனதாக கே.பாக்யராஜே நீடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.