கேரளாவில் 87 இடங்கள் ஹாட் ஸ்பாட்! பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு இன்று புதிதாக கொரோனா!

 

கேரளாவில் 87 இடங்கள் ஹாட் ஸ்பாட்! பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு இன்று புதிதாக கொரோனா!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் இன்று இடுக்கியில் ஆறு பேர், கோட்டயத்தில் 5 பேர் என 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இடுக்கியில் பாதிப்படைந்த ஆறு பேரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் இருவர் தமிழகத்தில் இருந்தும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஒரு 42 வயது பெண் மருத்துவர் உட்பட மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இடுக்கியில் கொரோனா பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

கோட்டயத்தில் இன்று கொரோனா பாதிப்பிற்கு உள்ளான ஐந்து பேரில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்தவர். மீதமுள்ள நால்வர் இவரிடம் தொடர்பில் இருந்தவர். தற்போது கோட்டயத்தில் கொரோனா பாதிப்பு எட்டாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 468 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 342 பேர். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 116 லிருந்து 123 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இதுவரை மாநிலம் முழுக்க 20,127 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 19,665 பேர் வீடுகளிலும் 462 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய் தொற்று அறிகுறியுள்ள 22,954 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 21,997 பேரின் பரிசோதனை முடிவுகள் ”நெகட்டிவ்” ஆக உள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் மணர்காடு மற்றும் கொல்லம் மாவட்டத்தில் சாத்தனூர், சாஸ்தாகோட்டை ஆகிய இடங்கள் “ஹாட் ஸ்பாட்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் “ஹாட் ஸ்பாட்” பகுதிகளின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்