கேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்

 

கேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்

ஆண்டின் 6  மாதங்கள் இக்கோயில்கள் கடும் பனியால்  சூழப்பட்டிருக்கும். அதன் காரணமாக, நான்கு கோயில்களின் நடையும் 6 மாதங்கள் வரை சாத்தப்படும். ஏப்ரல் மாதம் அட்சய திருதியையொட்டி திறக்கப்படும் இக்கோயில்களின் நடை தீபாவளி வரை திறந்திருக்கும்.

இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து, சிவனைத் தரிசித்து வருகின்றனர்.  

temple

உத்தர காண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன்கோயில்.  இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத்தும் ஒன்று.  எனவே, தமிழகம் உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோயிலுக்கு யாத்திரையை மேற்கொள்கின்றனர். 

சார்தாம் யாத்திரை

சார்தாம் (யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது)  என்றழைக்கப்படும் இப்புனித யாத்திரையை மேற்கொள்வதால் முக்தி கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே, முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையைப் பக்தர்கள் நிறைவு செய்கின்றனர். 

ஆண்டின் 6  மாதங்கள் இக்கோயில்கள் கடும் பனியால்  சூழப்பட்டிருக்கும். அதன் காரணமாக, நான்கு கோயில்களின் நடையும் 6 மாதங்கள் வரை சாத்தப்படும். ஏப்ரல் மாதம் அட்சய திருதியையொட்டி திறக்கப்படும் இக்கோயில்களின் நடை தீபாவளி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்கு நேரடியாகச் சாலை வழியாகச் செல்ல முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு வரை மலை ஏறியே செல்ல வேண்டும். 

temple

உத்தர காண்ட் வெள்ளம்

கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தர காண்டில் பெய்த கனமழையினால் கேதார்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டன.சார்தாம் யாத்திரைக்கு சென்ற 8000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினரும், பேரிடர் நிர்வாகக் குழுவினரும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால், பக்தர்கள் சார்தாம் யாத்திரைக்குச் செல்ல பயந்தனர். 

அதைத் தொடர்ந்து, உத்தரா காண்ட் அரசு மேற்கொண்டுள்ள மறுகட்டமைப்பு பணிகளால் மக்கள் நம்பிக்கையுடன் சார்தாம் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.2018-ம் ஆண்டு 26லட்சம் பக்தர்கள் கேதார்நாத் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.  

யாத்திரை செல்ல கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வரை, ஆன்லைன் மூலமும் செல்போன் செயலி மூலமும் சுமார் 8 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் முன்பதிவு செய்துள்ளார். 

 

temple

சார்தாம் நெடுஞ்சாலை திட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு , டிசம்பர் மாதம் டேராடூனில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . இதனால், யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகட்டமைப்பிற்கு வரவேற்பு

வெள்ளத்தால் சேதமடைந்த கேதார்நாத் செல்லும் நடைபாதையை சீரமைக்க 2660 கற்களை படிக்கட்டுகளாக செதுக்கி பயன்படுத்தியுள்ளனர். கோயிலுக்கு செல்லும்270 மீட்டர் தொலைவு வரையிலான பாதை 50 மீட்டர் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வருகை தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலான நேரத்திலும் கூட 3,000 பக்தர்கள் இந்த வருகை தளத்திலிருந்தே கேதார்நாத் கோயிலை தரிசிக்கமுடியும்.  இந்த மறுகட்டமைப்பிற்கு பக்தர்கள் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மேலும், கேதார்நாத்தில் உள்ள அடிப்படை முகாம்களில் பக்தர்களுக்கான இலவச மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 2-ம் தேதி சுவாமி விவேகானந்தா  மருத்துவமனையை  உத்தர காண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் திறந்து வைத்தார். 12 மெத்தைகள், ஐசியு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் பக்தர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.