குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்

 

குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்

அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

திருச்சி : ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள  குழந்தை சுர்ஜித் குடும்பத்தைத்  துணை  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் நேரில்  சந்தித்து ஆறுதல் வழங்கினார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட  ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் பல தனி நபர்கள்  என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் பாறைகள் இருப்பதால் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

surjith

இந்நிலையில்  மீட்புப் பணிகளைத் துணை  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட வந்தார். மேலும்  ஓபிஎஸ் குழந்தையின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

surjith

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘குழந்தை விழுந்த 1 மணிநேரத்தில் அரசு  மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. முதலில் இயந்திரம் மூலம் மீட்க முயற்சி செய்தோம். அது தோல்வியில் முடியவே, சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு அதிநவீன இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இதுவரை 35 அடி துளை போடப்பட்டுள்ளது. இன்னும் 45 அடி துளை போடவேண்டும். இந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 மணிநேரத்தில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில்  கிடப்பில் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படும்’ என்றார்.