குத்தூசி: விவசாய மலட்டுத்தன்மைக்கு பின்னால் வெளிநாட்டுச் சதி

 

குத்தூசி: விவசாய மலட்டுத்தன்மைக்கு பின்னால் வெளிநாட்டுச் சதி

இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லக் கஷ்டப்பட்டார் என்பதை குத்தூசி படத்தில் விளக்கியுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

சென்னை: இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லக் கஷ்டப்பட்டார் என்பதை குத்தூசி படத்தில் விளக்கியுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க சிவசக்தி இயக்கியிருக்கும் படம் “குத்தூசி”. ‘வத்திகுச்சி’ படத்தில் நாயகனாக நடித்த திலீபன், அறிமுக நடிகை அமலா ரோஸ், யோகி பாபு மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.

படம் குறித்து இயக்குனர் தியாகராஜன் கூறும் போது, முழுக்க இயற்கை விவசாயத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் படத்தில் சொல்கிறோம். இந்த இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லக் கஷ்டப்பட்டார் என்பதை விளக்கியுள்ளோம். இன்றைக்கு விவசாயம் பல இடங்களில் மலட்டுத்தனமோடு இருப்பதற்கு பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம். இருக்கும் விவசாய நிலத்தை விட்டு விட்டு வெளிநாட்டுக்குப் போனால் நாம் அநாதைகள்தான் என்பதை காட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை திருநெல்வேலி பக்கத்தில் நாங்குநேரி பகுதியில் இருக்கும் உழவர் மாளிகை என்ற அறக்கட்டளைக்குக் கொடுக்க இருக்கிறோம். இங்கு இருக்கும் உழவர் மாளிகையை உழவர்களுக்காகக் கட்டி வருகிறார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு  வட்டியில்லாத கடன் தொகை கொடுக்கப்பட்டு அதன் மூலம் விதை, உரம் ஆகியவற்றைக் கொடுத்து இயற்கை விவசாயத்தின் மூலம் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் வழிகாட்டுவார்கள் என்றார்.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடும் ஆர்வத்தைத் தூண்டும் இப் படத்திற்கு தமிழ்படம் கண்ணன் இசையமைக்கிறார். நீரவ்ஷாவின் உதவியாளர் பாஹி ஒளிப்பதிவு செய்கிறார்.