குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் யோகி ஆதித்யநாத்! 21 மாவட்டங்களில் 32 ஆயிரம் அகதிகள்

 

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் யோகி ஆதித்யநாத்! 21 மாவட்டங்களில் 32 ஆயிரம் அகதிகள்

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை 21 மாவட்டங்களில் அந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற தகுதியான 32 ஆயிரம் அகதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

குடியுரிமை

கடந்த 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அந்த மாநிலத்தில் அமல்படுத்துவதில் படு வேகமாக உள்ளது. மொத்தமுள்ள 75 மாவட்டங்களில், இதுவரை 21 மாவட்டங்களில் இந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற தகுதியான 32 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகளை அடையாளம் கண்டுள்ளது.

ஸ்ரீகந்த் சர்மா

இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஸ்ரீகந்த் சர்மா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக குடியுரிமை பெற தகுதியான அகதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. மொத்த 75 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, மாநிலம் முழுவதும் இந்த பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.