குடிக்க போகனும் இலவச பஸ் பாஸ் கொடுங்க….. குடிமகனின் அட்ராசிட்டி

 

குடிக்க போகனும் இலவச பஸ் பாஸ் கொடுங்க….. குடிமகனின் அட்ராசிட்டி

உள்ளூரில் குடிக்க டாஸ்மாக் இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று குடித்து வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என குடிமகன் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஈரோடு: உள்ளூரில் குடிக்க டாஸ்மாக் இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று குடித்து வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என குடிமகன் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் மதுவின் பிடியால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் குடிமகன்களோ அதெல்லாம் சாத்தியமே இல்லை என கூறி வருகின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் குடிமகன்கள் அவ்வப்போது கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் வெள்ளோட்டம் பரப்பு வசந்தாபுரத்தை சேர்ந்த விவசாயி செங்கோட்டையன் என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விநோதமான மனு ஒன்றை அளித்துள்ளார். நேற்று நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் செங்கோட்டையன் அளித்த மனுவில், கொடுமுடி ஒன்றியம், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி வேலப்பம்பாளையம் அருகில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

மாலையில் மது குடித்துவிட்டு செல்லும் பழக்கமுடையவர்கள் எங்கள் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் உள்ளூரில் கடை திறக்கப்படாமல் இருப்பதால் வெளியூர்களுக்கு சென்று மது குடித்துவிட்டு வரவேண்டி இருக்கிறது, வெளியூர் செல்வதால் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது.

எனவே உள்ளூரில் டாஸ்மாக்கை திறக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர் சென்று குடித்து வர வசதியாக தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனுவை படித்து பார்த்த மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.