கீழடி அகழாய்வு; அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழகத்துக்கு இடமாற்ற உயர் நீதிமன்றம் உததரவு!

 

கீழடி அகழாய்வு; அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழகத்துக்கு இடமாற்ற உயர் நீதிமன்றம் உததரவு!

கீழடி அகழாய்விற்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் அதே பணிக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

சென்னை: கீழடி அகழாய்விற்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் அதே பணிக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் திடீரென அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கீழடி அகழ்வாராய்ச்சியின் முழுமையான அறிக்கையையும் அவர் தயாரிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு சரியான பதிலை கொடுத்திருந்தோம். திராவிட நாகரீகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பானது. இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன். அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் ஆணை வந்தது என அமர்நாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது இடமாறுதலுக்கு எதிரான மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை, கீழடி அகழாய்விற்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் அதே பணிக்கு 15 நாட்களுக்குள் மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கீழடி அகழாய்வில் மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அகழாய்வு பணிகள் முடிவடையும் போது, தமிழ் மக்களின் பெருமை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக உள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.