கிராமத்தில் பணிபுரிய தயாரா? இந்தா பிடி எம்.பி.பி.எஸ். சீட்! மகாராஷ்டிரா அரசு அதிரடி சலுகை

 

கிராமத்தில் பணிபுரிய தயாரா? இந்தா பிடி எம்.பி.பி.எஸ். சீட்! மகாராஷ்டிரா அரசு அதிரடி சலுகை

5 ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவர்களுக்காக எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணிபுரிய அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என சர்வதேச சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் 1,300 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவிலேயே உள்ளனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

கிராம புறங்களில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சரி செய்ய மகாராஷ்டிரா அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கிராமப்புறங்களில் 5 ஆண்டுகள் பணியாற்ற விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 10 இட ஒதுக்கீடு அளிக்கவும், கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை படிப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதற்காக மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனை

அதேசமயம், இடஒதுக்கீட்டு சலுகை அம்மாநில குடியிருப்பு சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே. மேலும், இந்த இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களிடம் முதலில் இது தொடர்பாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்படும். படிப்பை முடித்து விட்டு கிராமத்தில் சென்று பணிபுரியவில்லை என்றால் 5 ஆண்டு சிறை மற்றும் மருத்துபடிப்பு ரத்து செய்யப்படும்.