காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்தான்- பாகிஸ்தான் அமைச்சர்

 

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்தான்- பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்தான் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் உள்பட பல சர்வதேச கூட்டங்களில் ஜம்மு அண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனாலும் பாகிஸ்தானுக்கு  கடைசியில் தோல்விதான் மிஞ்சுகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு சர்வதே அமைப்புகளின் கூட்டங்களில் இந்தியாவுக்கு எதிராகத்தான் பேசி வருகிறது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம்

ஜெனிவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்களை கூறியது. அதற்கு இந்தியா விளக்கம் அளித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. சீனாவை தவிர வேறுஎந்தநாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை. இதனால் பாகிஸ்தான் தனிமரமாக நிற்கிறது.

இந்நிலையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சுவிஸ் டி.வி.க்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஒரே வழி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தான் என்று கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

காஷ்மீர்

குரேஷி பேட்டியில், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. ஆனால் அண்டை நாடு (இந்தியா) எந்தவிதமான சாதகமான பதில் தெரிவிக்கவில்லை. எனவே  இருநாடுகளுக்கு இடையே இன்னும் சிறிது காலத்துக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. ஆகையால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரே வழி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்தான் என்று கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் இந்திய மாநிலம் என சர்வதேச ஊடகங்கள் முன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.