காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள்! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

 

காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள்! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இணையசேவை முடக்கம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

முன்னாள் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அரசியல் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.

குலாம் நபி ஆசாத்

காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் மற்றும் இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். கட்டுபாடுகளை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர். கவை ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. 

உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது, எந்தவொரு வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காகவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையால் ஒரு உயிர் கூட போகவில்லை அல்லது ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்தயைடுத்து கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது. இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இணையசேவை முடக்கம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.