காளை வீழ்த்திய கரடி! சென்செக்ஸ் 87 புள்ளிகள் குறைந்தது!

 

காளை வீழ்த்திய கரடி! சென்செக்ஸ் 87 புள்ளிகள் குறைந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 87 புள்ளிகள் குறைந்தது.

கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாத தொழில்துறை உற்பத்தி தொடர்பான புள்ளிவிவரங்கள் பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு வெளிவந்தது. இது தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்  போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, சன்பார்மா, டாடாஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் வங்கி உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி, எல் அண்டு டி, ஆக்சிஸ் வங்கி, பார்திஏர்டெல் உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,146 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,299 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு இன்று ரூ.148.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.147.98 லட்சம் கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 86.88 புள்ளிகள் குறைந்து 38,736.23 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30.40 புள்ளிகள் இறங்கி 11,552.50 புள்ளிகளில் நிலை கொண்டது.