காளையை புரட்டி எடுத்த கரடி! சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்தது!

 

காளையை புரட்டி எடுத்த கரடி! சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்தது!

தொடர்ந்து 3 தினங்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்தது.

இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. யெஸ் வங்கியின்  நிதிநிலை நிலை முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது. மேலும், புஷன் பவர் நிறுவனத்தின் மீது மோசடி புகார் ஒன்றை பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியது. இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வங்கி துறை பங்குகளுக்கு பலத்த அடி விழுந்தது.

பங்குச் சந்தை

பருவமழை நிலவரம் திருப்திகரமாக இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்ததகம் படுத்தது. இதுதவிர கடந்த 3 நாட்களாக பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டதால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து இருந்தது. இதனை நல்ல வாய்ப்பாக கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்த்தனர். இதுவும் பங்குச் சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எச்.டி.எப்.சி., கோடக் மகிந்திரா பேங்க், எச்.டி.எப்.சி.வங்கி  உள்பட  5 நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதேசமயம், யெஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, வேதாந்தா உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 748 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,742 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. அதேவேளையில், 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. அச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.46 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.13 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 318.18 புள்ளிகள் வீழ்ந்து 38,897.46 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 90.60 புள்ளிகள் இறங்கி 11,596.90 புள்ளிகளில் நிலை கொண்டது.