காணும் பொங்கல்: சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்து மாற்றத்துக்கு வாய்ப்பு-முழு விவரம்

 

காணும் பொங்கல்: சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்து மாற்றத்துக்கு வாய்ப்பு-முழு விவரம்

பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, “காணும் பொங்கல்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன

சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, “காணும் பொங்கல்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் “போகி” பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த நல்ல நாளில் சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்திக் கொண்டாடுகின்றனர். இரண்டாவது நாளில் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலை கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். காணும் பொங்கல் எதற்காக கொண்டாடுகிறோம்? எப்படி கொண்டாட வேண்டும்? என பல கதைகள் இருந்தாலும், அந்த வழிமுறைகள் அனைத்தும் மாறி, தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல இடங்களை காணச் செல்கின்றனர். குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த இடத்திற்குச் செல்வது வழக்கம்.

சென்னையை பொறுத்தவரை காணும் பொங்கல் அன்று, மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வர். இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், காணும் பொங்கல் அன்று சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், காவல்துறை உதவி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மெரினாவில் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

அதேபோல், சென்னை காமராஜர் சாலையில் வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் போர் நினைவுச்சின்னம் திருப்பப்பட்டு அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். கொடிமர இல்லம் சாலை, ஜி.பி.ரோடு, மணிக்கூண்டு, ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவும் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும், காமராஜர் சாலையில் மக்கள் முழுவதுமாக நிரம்பும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படாது எனவும், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை அருகே மக்கள் கூட்டம் அதிகமானால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.