காங்கிரஸ் தயவில் அமைச்சராக இருந்தது ஞாபகம் இருக்கா… துரைமுருகனை போட்டுதாக்கிய மோகன் குமாரமங்கலம்

 

காங்கிரஸ் தயவில் அமைச்சராக இருந்தது ஞாபகம் இருக்கா… துரைமுருகனை போட்டுதாக்கிய மோகன் குமாரமங்கலம்

மைனாரிட்டி அரசாகக் காங்கிரஸ் தயவில் தி.மு.க 2006-11 ஆட்சி செய்தது துரைமுருகனுக்கு ஞாபகம் உள்ளதா என்று காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் சீட் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி அளித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறினால் கவலையில்லை என்று கூறியிருந்தார்.

இதற்குக் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடுமையான பதில்கள் வந்தபடி உள்ளன. காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் இது குறித்து கூறுகையில், “துரைமுருகனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிட்டது. துரைமுருகன் காங்கிரஸ் பற்றிப் பேசினால் வரலாறு சாட்சியாக உண்மைகளைச் சுட்டிக்காட்ட வேண்டி வரும். 2006 முதல் 11 வரை தி.மு. க ஆட்சியில் இருக்கக் காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் தயவால் மைனாரிட்டி அரசில் துரைமுருகன் அமைச்சராக இருந்ததை அவர் மறந்துவிடக் கூடாது. 

கூட்டணி கட்சி ஒற்றுமை காரணமாகவே மக்களவை தேர்தலி; மகத்தான வெற்றி கிடைத்தது. கூட்டணியில் உள்ள கட்சிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்றார். தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே நடந்துவரும் இந்த வார்த்தை போரை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரசித்து வருகின்றன.