காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள்தான் தொழிலாளர்களின் பெரிய எதிரிகள்… உத்தர பிரதேச அமைச்சர் ஆவேசம்…

 

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள்தான் தொழிலாளர்களின் பெரிய எதிரிகள்… உத்தர பிரதேச அமைச்சர் ஆவேசம்…

தொழிலாளர் சட்டம் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்ப்பது மூலம், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தாங்கள்தான் தொழிலாளர்களின் பெரிய எதிரிகள் என்பதை உறுதி செய்துள்ளனர் என உத்தர பிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா ஆவேசமாக பேசியுள்ளார்.

நாடு தழுவிய லாக்டவுனால் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், அனைத்து வர்த்தகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்களுக்கும் தொழிலாளர் சட்டங்களில் நான்கை தவிர மற்ற அனைத்து சட்டங்களிலிருந்து தற்காலிகமாக 3 ஆண்டுகள் விலக்கும் அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி

உத்தர பிரதேச அரசின் இந்த அவசர சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் லல்லு கூறுகையில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அவசர சட்டத்தை கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. இப்போது தொழிலாளர்களின் மனதில் பாதுகாப்பின்மை நிச்சயமாக இருக்கும். இந்த அவசர சட்டத்தால் அவர்களுக்கு முறையான ஊதியங்கள் மற்றும் படிகள் கிடைக்காமல் போகலாம். இதற்கு யார் பொறுப்பு? தொழிலாளர்களின் ஊதியத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவாதம் அளிப்பாரா? என கடுமையாக குற்றச்சாட்டியதுடன் கேள்விகளையும் எழுப்பி இருந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முதலில் அவசர சட்டத்தை படிக்க வேண்டும் பின்பு கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால் தொழிலாளர்களின் பெரிய எதிரிகள் தாங்கள்தான் என்பதை அவர்களுடைய விமர்சனங்கள் வெளிப்படுத்துகிறது. இந்த அவசர சட்டம் முதலீட்டுக்கான பாதை வழி மட்டுமல்ல சொந்த ஊருக்கு திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைகளையும் திறக்கும் மற்றும் இங்கே அவர்களுக்கு வேலைகள் வழங்கும் என்பது தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களுக்கு அநேகமாய் தெரிந்திருக்காது என தெரிவித்தார்.