காங்கிரஸ் கொடியா? காவிக் கொடியா? நாளை 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

 

காங்கிரஸ் கொடியா? காவிக் கொடியா? நாளை 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன

போபால்: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் நடப்பாண்டுடன் முடிவடைகிறது. அதேபோல், தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்கப்பட்டதால், இந்த ஐந்து மாநிலங்களிலும் புதிய அரசை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரே கட்டமாகவும், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 76.35 சதவீத வாக்குகளும், மிசோரமில் 80 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 73.20 சதவீத வாக்குகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 74.21 சதவீத வாக்குகளும் பதிவாகின.

vote

இந்நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதற்காக வாக்கு என்னும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவே, மத்தியில் அடுத்து ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், ஆட்சிக்காலத்தின் எஞ்சிய நாட்களில் மத்திய அரசின் செயல்பாடுகளையும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகள், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி முகம் தெரிவதாகவும், மத்தியப்பிரதேசத்தில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மிசோரம் முடிவுகளை மாநில கட்சிகள் தீர்மானிக்கும் எனவும், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வாகை சூடும் எனவும் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, காவிக் கொடியா? காங்கிரஸ் கொடியா? என்பதை தீர்மானிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.