கல்யாணம் ஆன ஆண்களை காதலிக்கும் டீன் ஏஜ் பெண்கள்: சென்னை உயர்நீதிமன்றம் கவலை: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

கல்யாணம் ஆன ஆண்களை காதலிக்கும்  டீன் ஏஜ் பெண்கள்: சென்னை உயர்நீதிமன்றம் கவலை: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

சென்னை: திருமணமான ஆண்களை காதலிக்கும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

திருமணமான  45 வயது நபர் ஒருவரை  17 வயதே ஆன  இளம்பெண் ஒருவர் காதலித்து வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறுமியை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோர் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இது குறித்து பேசியுள்ள நீதிபதிகள், ‘ 17 வயது சிறுமி 45 வயது ஆணுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. இன்று ஒரே நாளில் இதேப் போன்று திருமணம் ஆன ஆண்களுடன் டீன் ஏஜ் சிறுமிகள் ஓடிவிட்டதாகக் கூறி எட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளது  வேதனையாக உள்ளது. நாளுக்கு நாள் திருமணமான ஆண்கள் மீது காதல் வயப்பட்ட டீன் ஏஜ் சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். மாநில காவல்துறை டி.ஜி.பி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஆகியோர் டீன் ஏஜ் சிறுமிகள் திருமணமான ஆண்களுடன் ஓடிச் செல்லும் விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்’  என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

திருமணமான ஆண்களுடன் கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜ் சிறுமிகள் எத்தனை பேர் ஓடிச் சென்றுள்ளனர், அவர்களில் எத்தனைப் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்கிற விவரத்தைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சிறுமிகளை காதல் என்ற போர்வையில் அழைத்துச் செல்லும் ஆண்கள் மீது பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுவதாகத் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.