கருப்பு கொடி போராட்டம் சுய விளம்பரம்: தமிழிசை காட்டம்

 

கருப்பு கொடி போராட்டம் சுய விளம்பரம்: தமிழிசை காட்டம்

பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட கருப்பு கொடி போராட்டம் சுய விளம்பரம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட கருப்பு கொடி போராட்டம் சுய விளம்பரம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய மருத்துவ தேவைகளை அரசு வழங்க வசதியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தஞ்சை, நெல்லை உயர்தர பன்னோக்கு மருத்துவமனை மற்றும் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு கருப்புகொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

இவை அனைத்தும் ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் என்ற எல்லையை தாண்டி நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏசியும், பேசியும் அங்கே கடமை ஆற்ற வந்த காவல்துறை அதிகாரிகளை தான் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற கண்ணியம் இல்லாமல் வைகோ காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் அழைத்து எச்சரித்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கடமையாற்ற வந்தவர்களை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் நீங்கள் கூறும் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா?

கடந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்வதாக அடையாளப்படுத்திக்கொண்ட நீங்கள் இன்று அதே இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணைபோன தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறீர்கள். இதுதான் உங்களின் அடிக்கடி நிறமாறும் அரசியல் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஒப்புக்குகூட தமிழக மக்களை கஜா புயலின் போது பார்க்க வரவில்லை என்று கூறும் வைகோவே, ஒப்புக்கு அரசியல் நடத்துபவர் அல்ல என் தலைவர் மோடி . கஜா புயல் வரும் முன்பே மத்திய அரசு புயல் எச்சரிக்கையையும், உதவியையும் தமிழகத்திற்கு வழங்கியதால்தான் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

வெறும் உதட்டளவில் இல்லாமல் வடமாநில தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே தமிழக மக்களின் துயரங்களை பகிர்ந்துகொண்டார். மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி நிவாரண பணிகளை பிரதமர் அலுவலகம் கண்காணித்தது உதவியது என்பதே உண்மை. ஒப்புக்கு அரசியலும், ஒப்பாரி அரசியலும் உங்களை போல் செய்பவர் அல்ல மோடி.

நீங்கள் நடத்திய கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் உங்களை விளம்பரப்படுத்தி கொள்ள யாருக்காகவோ ஒப்புக்காக நடத்தியதோ? அரசியலில் கடந்த காலங்களில் கள்ளத்தோணி நாடகம், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பது தான் கடந்தகால சாதனை விருதுகள். உங்களை நம்பிவந்து தீக்குளித்த தொண்டர்களின் ஆன்மா இன்று நீங்கள் எந்த ஸ்டாலினை எதிர்த்து வந்தீர்களோ அவரை முதல்வராக்குவேன் என்பதை கேட்டு அந்த ஆன்மா உங்களை மன்னிக்காது.

உங்கள் கருப்பு கொடி போராட்டம் உங்களின் சுய விளம்பரமே தவிர தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது. மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழக பா.ஜனதாவும் பொறுத்துக் கொள்ளாது என கூறியுள்ளார்.