கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 199 புள்ளிகள் வீழ்ந்தது

 

கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 199 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடனேயே தொடங்கியது. இருப்பினும் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற சில சாதகமான அம்சங்களால் ஏற்றம் கண்டது. அதேவேளை சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததால் பங்குசந்தைகளில் சரிவு தவிர்க்க முடியாமல் போனது.

ரிசர்வ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், வேதாந்தா, டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, கோடக்பேங்க், ஆக்சிஸ் வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐ.டி.சி., பவர் கிரிட், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 962 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,532 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.59 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.32 லட்சம் கோடியாக இருந்தது.

யெஸ் பேங்க்

இன்றைய  வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 198.54 புள்ளிகள் இறங்கி 38,106.87 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 46.80 புள்ளிகள் வீழ்ந்து 11,313.10 புள்ளிகளில் முடிவுற்றது.