கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

 

கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காஷ்மீர் விவகாரத்தில் அங்கு பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் நிலவுகிறது. கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று காலையில்தான் அங்கு போன்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் ஒரளவு மீண்டும் வழங்கப்பட்டது. இதனால் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதேசமயம் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகர் விமான நிலையம்

இந்நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் விமானத்தில் ஸ்ரீநகர் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் தங்களது கட்சி எம்.எல்.ஏ. முகமது யூசுப் அரிகாமி மற்றும் தொண்டர்களை பார்க்க வந்து இருப்பதாக அவர்கள் பாதுகாப்பு படையினரிடம் கூறினர். ஆனால் பாதுகாப்பு படையினர் சட்ட உத்தரவை காட்டி அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. 

சத்ய பால் மாலிக்

சீதாராம் யெச்சூரி விமானம் ஏறுவதற்கு முன், தானும், டி.ராஜாவும் ஸ்ரீநகரில் உள்ள தங்களது கட்சி எம்.எல்.ஏ. மற்றும் தொண்டர்களை சந்திக்க காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் அனுமதி வேண்டியதாக டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். ஆனாலும், அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.