கம்ப்ளைண்ட் கொடுத்தும் போலீஸ் ஏற்கவில்லை: ஜெயக்குமார் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

 

கம்ப்ளைண்ட் கொடுத்தும் போலீஸ் ஏற்கவில்லை: ஜெயக்குமார் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்தும் அதனை காவல்துறை ஏற்கவில்லை என ஆடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தரப்பில் வழக்கறிஞர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்தும் அதனை காவல்துறை ஏற்கவில்லை என ஆடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தரப்பில் வழக்கறிஞர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் நேற்று முன்தினம் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரம் நேற்றுதான் பூதாகரமாகியது. 

மேலும் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் குரல் மார்ஃபிங் செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் சசிகலா குடும்பமான மாஃபியா கும்பல் இருக்கிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் அதிமுக எம்.பி ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்திருக்கிறது. அந்த எம்.பி-யின் தந்தையும் அரசியல் விஐபிதான் என கூறினார். இதனையடுத்துதான்  இந்த ஆடியோ பரவியது என கூறப்பட்டது. ஆனால் இதனை டிடிவி தரப்பினர் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவர் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், `மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டுச் சென்ற ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார். கர்ப்பத்தைக் கலைக்குமாறு பெண்ணை மிரட்டினார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டி.ஜெயக்குமார் பெயரில் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, காவல்துறையினர் அதை ஏற்கவில்லை. எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையத்திடமும் அவர் புகார் அளித்துள்ளார்.